SQ321 விமானப் பயணியின் மரணம்: சிங்கப்பூர் ஏர்லைன் மீது மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

லண்டன், ஆகஸ்ட்-30,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது உயிரிழந்த பிரிட்டிஷ் பயணியின் மனைவி, அந்நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2024 மே மாதம் மியன்மார் மீது பறந்த SQ321 விமானம் திடீரென உயரத்தில் இருந்து கீழே சரிந்த விபத்தில், 74 வயதான Linda Kitchen-னின் கணவர் Jeffrey Kitchen (73) மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே சமயம், அந்த மூதாட்டி கடுமையான முதுகுத்தண்டு காயங்களுக்கு ஆளானார்.
இந்நிலையில், கணவரின் மரணத்துக்கும், தனது மருத்துவச் செலவுகள் மற்றும் சிறப்புச் சிகிச்சைக்காகவும் அவர் இழப்பீடு கோரியுள்ளார்.
Linda மற்றும் அவரது கணவரின் எஸ்டேட் சார்பாக இரண்டு தனித்தனி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கு என்பதால் இதுகுறித்து கருத்து கூற முடியாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.



