
புத்ராஜெயா, ஆகஸ்ட்-29:நேப்பாளத்தின் Rasuwa மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் அதன் தொடர்பில் சீனாவில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகளைத் தொடர்ந்து, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு நிலை குறித்த நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சு விரிவுபடுத்தியுள்ளது.
தற்போதைக்கு சீனாவின் Darchen பகுதியில் உள்ள 72 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் வழியாக தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சீனாவில் தொலைத்தொடர்புத் துண்டிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மேலும் 36 மலேசியர்களைத் தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சீன அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களைத் தொடர்புகொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேப்பாளத்தைப் பொறுத்தவரை, இதுவரை 55 மலேசியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், முன்னதாக தொடர்பில் இல்லாத இருவர் தற்போது பத்திரமாகத் தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாகவும் விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியது.
என்றாலும், நேப்பாளத்தில் அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 116 வெளிநாட்டவர்களில் இதுவரை மலேசியர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.
அங்குத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விஸ்மா புத்ராவின் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வரும் நிலையில், பொது மக்கள் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.



