
கிள்ளான் , பிப் 25 – கிள்ளான் ராஜா மஹாடி தேசிய இடைநிலைப் பள்ளியில் பள்ளி பாட நேரத்திலேயே 4 ஆம் மற்றும் 5 ஆம் படிவ மாணவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் போதிக்கும் விவகாரத்திற்கு தற்போது சுமூகமான தீர்வு காணப்பட்டது.
கிள்ளான் வட்டாரத்தில் அதிகமான இந்திய மாணவர்கள் படிக்கும் இந்த இடைநிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் அதிகமான மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களை எடுக்கின்றனர்.
இவ்வாண்டு திடீரென அவ்விரு பாடங்களும் பள்ளி நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரத்தில் போதிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவு அண்மையில் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்த பெற்றோர்களின் கவலை மற்றும் ஆட்சேபத்தை வணக்கம் மலேசியாவும் முக்கியத்துவம் கொடுத்து தகவல் வெளியிட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கல்வித்துறை துணை அமைச்சர் வோங் கா வோ ( Wong Kah Woh ) தீவிர நடவடிக்கையில் இறங்கினார்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் , மாநிலக் கல்வி துறை (JPN), மாவட்ட கல்வித்துறை மற்றும் தலைமையாசிரியர் ஆகியோரும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு ஈடுபட்டனர்.
இறுதியில் பள்ளி பாட நேரத்திலேயே 4 மற்றும் 5 ஆம் படிவ மாணவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடம் போதனை நடைபெறும் என காணப்பட்ட முடிவினால் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இடைநிலைப் பள்ளியில் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்கள் எடுப்பது மாணவர்களின் உரிமை என்பதால் அதற்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் பள்ளி நேரத்திலேயே அப்பாடங்களை போதிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்த துணைக்கல்வி அமைச்சருக்கு குணராஜ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த வேளையில் இந்த விவகாரத்திற்கு காலம் தாழ்த்தாமல் விரைந்து தீர்வு கண்ட துணைக்கல்வி அமைச்சர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் மலேசிய தமிழ்ப்பள்ளி நலன்புரி இயக்கங்களின் சார்பாக அதன் தலைவர் வெற்றிவேலனும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.