Latestமலேசியா

பேராக்கில் கேபல் திருட்டினால் ETS, KTM மின்சார ரயில் சேவைகளில் பெரும் தாமதம்

கோலாலம்பூர், மே-26-பேராக், சுங்கை சிப்புட் மற்றும் கமுண்டிங் இடையே
95.8 ஆவது கிலோமீட்டரில் 100 மீட்டர் நீளமுள்ள கேபல் திருடப்பட்டதால், சிக்னல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இன்று வட பகுதி ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை மலேயன் ரயில்வேயின் துணைப் போலீசாரால் வழக்கமான சோதனையின்போது கண்டறியப்பட்டது.

இந்தத் திருட்டைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதி வழியாகச் செல்லும் துரித மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் வட பகுதிக்கான KTM கொம்யூட்டர் உத்தாரா சேவைகள் 60 நிமிடங்களுக்கு மேல் தாமதத்தைச் சந்தித்ததாக KTM உறுதிப்படுத்தியது.

KTM கொம்யூட்டர் உத்தாரா சேவைகளில், 34 நிமிடங்கள் தாமதமான ரயில் எண் 2902, 40 நிமிடங்கள் தாமதமான ரயில் எண் 2904, 23 நிமிடங்கள் தாமதமான ரயில் எண் 2903 மற்றும் 25 நிமிடங்கள் தாமதமான ரயில் எண் 2905 ஆகியவை அடங்கும்.

இப்பகுதி வழியாகச் செல்லும் அனைத்து ETS சேவைகளும் தாமதங்களைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் EP9121 ரயில் 90 நிமிடங்கள், EX9171 ரயில் 21 நிமிடங்கள், EP9323 ரயில் ஆறு நிமிடங்கள் மற்றும் EG9343 ரயில் மூன்று நிமிடங்கள் தாமதமாகும் என கே.டி.எம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேபள் திருட்டைத் தீவிரமாகக் கருதுவதாகவும் இதனால் ரயில் சேவைகளில் தடை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், தேசிய ரயில் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கிறது என மலேயன் ரயில்வே சுட்டிக்காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!