
நீலாய், மார்ச் 17- நீலாய் நினைவுப் பூங்காவிலிருந்து கடந்த மாதம் அஸ்திப் பேழைகள் திருடப்பட்டது மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகப் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பிப்ரவரி 26 ஆம் தேதியன்று அந்த நினைவுப் பூங்காவிலிருந்து பல அஸ்திப் பேழைகள் காணாமல்போன விவாகாரம் குறித்து தனது துறைக்கு புகார் கிடைத்ததாகக் நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan ஜொஹாரி யஹ்யா ( Johari Yahya ) தெரிவித்தார்.
சந்தேக நபர் வெளிநாட்டு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நினைவுப் பூங்கா நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, அஸ்தியைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியதோடு , அதனை திருப்பித் தருவதற்கான நிபந்தனையாகப் பணம் கேட்டதாகவும்த தகவல் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் 380, 384 மற்றும் 297 ஆகிய பிரிவுகளின்படி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தேக நபரை அடையாளம் காண்பது மற்றும் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு வலையமைப்பைக் கண்டறிவது உள்ளிட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரத்தில் எல்லை தாண்டிய தகவல் தொடர்பு அம்சங்களும், டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடும் அடங்கியுள்ளதால் சம்பந்தப்பட்ட தரப்பினரிமிருந்து போலீஸ் தொழில்நுட்ப உதவியை நாடுகிறது என்று ஜொஹாரி குறிப்பிட்டார்.



