
கோலாலாம்பூர் – ஜூலை-8 – உள்ளூர் நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஓர் இளம் பெண்ணிடம், கோயில் அர்ச்சகர் ஆபாச சேட்டை புரிந்த சம்பவம் வைரலாகி, கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
சிலாங்கூர், செப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள ஒரு கோயிலில் ஜூன் 21-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்ததாக, பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடந்தவற்றை விரிவாக பதிவிட்டுள்ளார்.
தாயார் இந்தியா சென்றதால், வழக்கமாக தான் செல்லும் கோயிலுக்கு அவர் அன்று தனியாக சென்றுள்ளார். வழிபாட்டு முறைகள் குறித்து அவ்வளவாகத் தெரியாததால், பூசாரி கூறியதை அப்பெண் கேட்டுள்ளார்.
சனிக்கிழமை கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பூஜைகள் முடிந்ததும் வந்து பார்க்குமாறு கூறிய பூசாரி, பின்னர் அப்பெண் வந்தவுடன் எதையோ முனுமுனுத்து அவர் மீது புனித நீரை தெளித்தார்.
அப்போது அப்பண்ணின் அந்தரங்க இடங்களில் தகாத முறையில் கை வைத்து, ஐயர் காமச்சேட்டை புரிந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்து கிளம்பினார்; அவர் கிளம்பும் முன், கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல், “ உனக்கு இந்த வாரமே அதிர்ஷ்டமாக இருக்கும்; அதற்குரிய ஏற்பாட்டை தான் செய்துள்ளேன்” என்று அர்ச்சகர் கூறியிருக்கிறார். நடந்தவற்றை மனதுக்குள்ளேயே வைத்திருந்த அப்பெண் ஜூலை 4-ஆம் தேதி தாயார் நாடு திரும்பியதும் அவரிடம் கூற, போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
தன்னை, ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணாக அனுதாபம் தேடுவதற்காக அல்லாமல், மற்றவர்களுக்கும் இது போன்று நடக்கக் கூடாது என்ற படிப்பினையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென்பதே, தமது அப்பதிவின் நோக்கம் என அப்பெண் தெரிவித்தார்.
இவ்வேளையில், இக்குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினரை வணக்கம் மலேசியா தொடர்பு கொண்ட போது, அந்த அர்ச்சகர் தலைமறைவாகியிருப்பதாகத் தெரிவித்தனர். அவர் எங்கிருக்கின்றார் என்பதை தாங்களும் விசாரித்து வருவதாகவும், போலீஸ் உள்ளிட்ட தரப்புகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் உறுதியளித்தனர்.
வைரலாகியுள்ள இப்பதிவு வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணுக்கு ஆதரவு குவியும் அதே வேளை, காணாமல் போன அர்ச்சகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.