
கோலாலம்பூர், மே-17-நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில், அந்நிய நிதி புழக்கத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவைத் தொடர்ந்து, ‘Sekretariat Gerak Gempur Media Sosial Rakyat’ அரசியல் பிரிவின் தலைவர் Shahbudin Embun இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ரஃபிசியுடன் தொடர்புடைய உள்ளூர் முகவர் மூலம், வெளிநாட்டு அமைப்பிலிருந்து 1.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான அந்நிய நிதி நாட்டிற்குள் வந்துள்ளதாக அந்த அரசு சாரா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக, தீவிரவாத கருத்துக்களைப் பரப்புவதற்கும் வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் இறையாண்மையில் வெளிநாட்டு தலையீட்டைத் தடுக்கும் வகையில், SOSMA அல்லது AMLA சட்டத்தின் கீழ் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டு குறித்து ரஃபிசி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.



