
கோலாலம்பூர், ஜூன்-13-பதிவுச் செய்யப்படும் பாலியல் குற்றங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவை, பாதிக்கப்பட்டவர்கள் நன்கு அறிந்த மற்றும் நம்பிய நபர்களாலேயே நடத்தப்படுவதாக போலீஸார் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
புக்கிட் அமானின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவின்படி, இக்குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களாகவே இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பயம், மிரட்டல் அல்லது குடும்பச் சூழல் காரணமாகப் புகாரளிக்கத் தயங்குவதால், இந்த விவகாரங்களைக் கண்டறிவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதனால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் ஏற்படும் நடத்தை மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸார் வலியுறுத்துகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தரவும், இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பொது மக்களும் தயக்கமின்றி உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் என புக்கிட் அமான் கேட்டுக் கொண்டுள்ளது.



