
ஜோகூர் பாரு – ஜூலை 8 – கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்து, திருடுப் போனதாக புகார் அளிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, 15 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் சாலையில் தள்ளிக்கொண்டு போகும்பொழுது அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர் என்று ஜோகூர் பாரு காவல்துறைத் தலைவர் ரவூப் செலமட் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவர் என்பதும், இன்னொருவர் முந்தைய மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் பிடிபட்டு பள்ளியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அச்சிறுவர்கள் சேதமடைந்த மோட்டார் சைக்கிளை நகர்த்த முயற்சிப்பதற்கு முன்பு அருகிலுள்ள புதரில் மறைத்து வைக்கும் பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று, அப்பகுதியிலுள்ள மதப் பள்ளியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.