
ஜோர்ஜ்டவுன், டிசம்பர் 21-பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் மரம் முறிந்து விழுந்த விபத்தில், 17 வயது பையனும் 12 வயது சிறுமியும் காயமடைந்துள்ளனர்.
ஜாலான் பினாங் சாலையில் நேற்று ஏற்பட்ட இச்சம்பவத்தில், திடீரென முறிந்து விழுந்த பெரிய மரம், சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.
அதில் காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனமும் சேதமடைந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மாநகர மன்ற பணியாளர்களுடன் இணைந்து, சாலையில் விழுந்துகிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
மரம் முறிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



