
பாலி, நவம்பர்-21,இந்தோனேசியாவின் பாலி தீவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலை, கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
சுமார் 50 அடி, அதாவது 15.315 மீட்டர் உயரம் கொண்ட இந்த விநாயகர் சிலை, செயற்கைப் பிரம்பு எனப்படும் _Synthetic Rattan_ பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பாலியைச் சேர்ந்த 126 திறமையான கைவினைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்தப் பிரம்மாண்டச் சிலையை வடிவமைத்துள்ளனர்.
பாலியின் Gianyar பகுதியில் உள்ள Alas Harum சுற்றுலாத் தலத்தில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக உயரமான, ஆதரவுக் கட்டமைப்புடன் கூடிய செயற்கைப் பிரம்புச் சிற்பம் என்ற பிரிவில் இச்சிலை கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இச்சாதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25-ஆம் தேதி சிலை பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
பாலி மக்களின் பாரம்பரியக் கைவினைத் திறனையும், இந்து சமயக் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் இந்தப் பிரம்மாண்ட விநாயகர் சிலை, தற்போது சுற்றுப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.



