
புத்ராஜெயா, ஏப்ரல்-17, மலேசியாவுடனான இருவழி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தனது உறுதியானக் கடப்பாட்டை சீன அதிபர் சீ சின் பிங் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நாட்டு மக்களுக்கும் அதன் வழி இவ்வட்டாரத்தின் சுபிட்சத்துக்கும் வழி வகுக்கும் வகையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் மேலும் அணுக்கமாக ஒத்துழைக்கத் தாம் தயார் என்றார் அவர்.
சீன-மலேசிய சமூகங்களின் உறவையும் ஒத்துழைப்பையும் வியூக திசையை நோக்கி உயர் மட்ட அளவில் கொண்டுச் செல்லவும் பெய்ஜிங் தயார் என சின் பிங் சொன்னார்.
3 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா வந்துள்ள அவர், நேற்று இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில் அவ்வாறு கூறினார்.
“12 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வருகிறேன். இந்நாடு அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. மலேசியா மடானி தாரக மந்திரத்தின் மூலம் நாட்டையும் நாட்டு மக்களையும் சரியான வெற்றிப் பாதையில் கொண்டுச் செல்வதற்காக உங்களுக்கு வாழ்த்துகள்” என பிரதமர் அன்வாரையும் சின் பிங் பாராட்டினார்.
கடந்தாண்டு 50-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிய சீன-மலேசிய அரச தந்திர உறவு, இனி தலைமுறை கடந்து நீடிக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
2009 முதல் தொடர்ந்து 16-ஆவது ஆண்டாக மலேசியாவின் மிகப் பெரிய வர்த்தப் பங்காளியாக சீனா திகழ்வது குறிப்பிடத்தக்கது.