
கோலாலம்பூர், ஏப் 4 – நாட்டில் இந்து சமய அலுவல்கள் மேலாண்மையை மேலும் வலுப்படுத்த தேசிய மற்றும் மாநில அளவிலான இந்து அறநிலை வாரியத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என HYO எனப்படும் மலேசிய இந்து இளைஞர் பேரவையின் தேசியத் தலைவர் ஆனந்தன் சுப்ரமணியம் வலியுறுத்தினார்.
அறநிலை வாரியத்தின் மூலம் இந்து இந்து சமய வழிபாட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், சமய சொத்துக்களை சிறப்பாக நிர்வகிக்கவும் உதவ முடியும். பினாங்கில் ஏற்கனவே இத்தகைய ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பு செயல்பட்டு வந்தாலும், இதேபோன்ற அமைப்பு இதர மாநிலங்களில் இல்லாததால், நிலங்கள், கோயில்கள் மற்றும் சமயம் தொடர்பான சொத்துக்களின் நிர்வகிப்பில் பல்வேறு சவால்கள் உருவாகியுள்ளன.
இத்தகைய வாரியம் அமைப்பதன் மூலம் தொழில்முறை மற்றும் முறையான மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்கு உதவமுடியும் என மலேசிய இந்து இளைஞர் பேரவை நம்புகிறது. இந்த வாரியம் இந்து வழிபாட்டு தலங்களின் நிதி மற்றும் சொத்துக்களின் நிர்வகிப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, விரயமான செலவுகளைத் தவிர்த்து , பொறுப்புணர்வை அதிகரிக்க முடியும்.
இந்த அறநிதி வாரியத்தின் மூலம் கோயில்கள் மற்றும் இந்து சமூக நலத்திட்டங்களுக்கு நிலையான நிதி வசதியை வழங்குவதில் முக்கிய பங்காற்ற முடியும் என ஆனந்தன் சுட்டிக்காட்டினார். தேசிய மற்றும் மாநில சமய அறநிலை வாரியம் அமைக்கப்படுவது இந்து சமய அமைப்புக்களை வலுப்படுத்தும் ஒரு முன்னேற்றமான நடவடிக்கையாக அமையும் என்பதோடு மலேசிய இந்து சமூகத்திற்கு நீண்ட கால பலனை தரும் என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.