
கோலாலம்பூர், நவம்பர் 25 – பாப்பாகோமோ (Papagomo) என அழைக்கப்படும் வான் முஹமட் அஸ்ரி வான் டெரிஸ் (Wan Muhammad Azri Wan Deris) வெளியிட்டதாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான உள்ளடக்கங்களை யூடியூப் தளத்தில் தொடர்ந்து பரப்ப அனுமதித்ததாகக் கூறி, கூகுள் (Google) நிறுவனத்துக்கு எதிராக மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, 300 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடுத்த வழக்கு நிர்வாக விசாரணை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 19ஆம் தேதி கூகுளுக்கு அறிவிப்பு அனுப்பியதாகவும், இருப்பினும் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கவும் சம்பந்தப்பட்ட யூடியூப் கணக்கின் அணுகலை முடக்கவும் கூகுள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் எம்.சி.எம்.சி. குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனால் நாட்டின் தலைவர்கள், அரசாங்க நிறுவனங்கள் மீதான நற்பெயரும் பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ள எம்.சி.எம்.சி., சம்பந்தப்பட்ட கணக்கை முடக்குவதுடன், பாப்பாகோமோ தொடர்பான இதேபோன்ற உள்ளடக்கங்களையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பொதுவான இழப்பீடு, கடுமையான இழப்பீடு மற்றும் முன்மாதிரி இழப்பீடு எனத் தலா 100 மில்லியன் ரிங்கிட் வீதம் மொத்தம் 300 மில்லியன் ரிங்கிட் வழங்கவும் கோரியுள்ளது.



