
கோலாலம்பூர், அக்- 16 -இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக 2027ஆம் ஆண்டுக்கான மடானி வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.
இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கான ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தொழில்துறை தானியக்கமாக்கல், விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் திறன் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.
சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில், தெக்கூன் மற்றும் அமானா இக்தியார் மலேசியா மூலம் 150 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைப் பராமரிக்க 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜொகூர் மாநிலம் குளுவாங்கில் உள்ள பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முழுமையான மாற்றுப் பள்ளிக் கட்டடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்புகள் இந்தியச் சமூகத்தின் திறன் மேம்பாடு, தொழில் வளர்ச்சி மற்றும் கல்வி வசதிகளுக்கு ஆதரவளிக்கும் என்று ரமணன் தெரிவித்தார்.
பட்ஜெட் 2027-இல் அமைச்சுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி, பயிற்சித் திட்டங்களுக்கு 8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் தொழிலாளர்களுக்காக அரசாங்கமும் கிரெப் (Grab) நிறுவனமும் இணைந்து 160 மில்லியன் ரிங்கிட் நிதித் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன.
திறன் பயிற்சி, தொழிலாளர் நலன் மற்றும் சமூக மேம்பாட்டை வலுப்படுத்தும் இந்த ஒதுக்கீடுகளுக்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ரமணன் கூறினார்.



