
கோலாலம்பூர், செப்- 23-நாடு முழுவதும் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ‘Ops ASAP II’ சோதனை நடவடிக்கைகளில், சுமார் 25.7 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 26.3 மில்லியன் கடத்தல் சிகரெட்டுகளையும் 22,184 லிட்டருக்கும் அதிகமான மதுபானங்களையும் சுங்கத் துறை பறிமுதல் செய்தது.
சுங்க வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களின் கடத்தல், பதுக்கி வைத்தல் மற்றும் அவற்றின் விற்பனையைத் தடுக்கும் வகையில் அச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் மொத்தம் 445 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுங்க அமலாக்கப் பிரிவின் உதவித் தலைமை இயக்குநர் Raizam Setapa தெரிவித்தார். வணிகர்கள், கடத்தல் பொருட்களை வாகனங்கள் அல்லது மறைவான இடங்களில் பதுக்கி வைத்து, குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரிகள் மற்றும் தீர்வைகள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 25,767,428.50 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வேளையில், கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட ‘Ops Keras 1’ மற்றும் ‘Ops Keras 2’ நடவடிக்கைகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். Jalan Imbi, Jalan Kuchai Maju பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 359,000- ரிங்கிட்டுக்கும் அதிகமாகும்.
அனைத்து சம்பவங்களும் 1967ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் 135(1)(d) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.



