
நிபோங் தெபால், ஜனவரி 13 – அரசு வழங்கும் 150 ரிங்கிட் ஆரம்ப பள்ளி உதவியான BAP தொகையை பெற்றோருக்கு முழுமையாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tun Syed Sheh Barakbah இடைநிலைப்பள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில பள்ளிகள் இந்த அரசு உதவி தொகையை பெற்றோர்–ஆசிரியர் சங்கமான PIBG கட்டணம் அல்லது பிற பள்ளி தொடர்பான செலவுகளுக்காக பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெற்றோர் யாருக்காவது இந்த தொகையில் கழிவு செய்யப்பட்டால், அதனை உடனடியாகத் தன்னிடம் தெரிவிக்க வேண்டுமென்றும் BAP தொகையில் கழிவு செய்வது முற்றிலும் அனுமதிக்கப்படாத செயல் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நாடு முழுவதும் BAP திட்டத்திற்காக 800 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் படிவம் 1 முதல் படிவம் 6 வரை உள்ள சுமார் 52 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் Fadhlina தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள சுமார் 10,000 பள்ளிகளில் இந்த உதவி தொகை ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்துக்குள் முழுமையாக வழங்கி முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.



