
இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்து; செராஸில் சாலையில் 69 வயது ஆடவரை தாக்கிய நபர் கைது
காஜாங், பிப்ரவரி-9
செராஸ் , 9ஆவது மைல் , பெக்கான் சன்டெக்ஸ் ( Suntex ) அருகே நிகழ்ந்த சிறிய சாலை விபத்தைத் தொடர்ந்து, 69 வயது ஆடவரை தாக்கி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் 52 வயது நபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவரான ஓய்வு பெற்றவர் நேற்று மாலை மணி 4.49 க்கு புகார் அளித்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்கு அருகில் சந்தேக நபரால் தாக்கப்பட்டு குற்றவியல் ரீதியாக மிரட்டப்பட்ட பின்னர் தான் காயமடைந்ததாக புகார்தாரர் கூறியுள்ளார்.
புகார்தாரரின் வாகனத்திற்கும் சந்தேக நபரின் வாகனத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய மோதலில் இருந்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் நஸ்ரோன் சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபர் நேற்றிரவு மணி 11.30 மணியளவில் காஜாங்கில் கைது செய்யப்பட்டதோடு விசாரணைகளுக்கு உதவ இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



