
கோலாலம்பூர், பிப் 24 -முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் உதவியாளர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது 100 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
இந்த பணம் பல அறைகளில் பல பேக்குகள் மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக நியூ ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்ஸிற்கு ( New Straits Times) அணுக்கமான தகவல்கள் தெரிவித்தன.
இந்த சோதனையின்போது ஆவணங்கள், நகைகள் மற்றும் மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
MACC இன் சிறப்பு விசாரணைக் குழுவால் நடத்தப்பட்ட இந்த சோதனையானது, இஸ்மாயில் சப்ரியின் முன்னாள் ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் மீதான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாகும்
பல மாத கண்காணிப்பை தொடர்ந்து அந்த முன்னாள் உதவியாளரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை அதிகாரிகள் இப்போது பணத்தின் மூலத்தை ஆராய்ந்து வருவதோடு இதில் அரசியல் நிதிக்கான சாத்தியமான தொடர்புகளும் அடங்கும் என கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட நிதி தொடர்பாக முன்னாள் பிரதமரின் ஊழியர்களில் ஒரு முக்கிய நபரின் பங்கு குறித்த விசாரணையும் அடங்கும்.
இஸ்மாயில் சப்ரி பிரதமராக இருந்தபோது அவருக்கு உதவியாளர்களாக பணியாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டதை நேற்று MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி ( Azam Baki ) உறுதிப்படுத்தினார்.
ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பாக விசாரணை நடத்த வசதியாக அந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இஸ்மாயில் சப்ரி சனிக்கிழமை காலை வீட்டில் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து Kota Damansara மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்டதோடு , தற்போது இஸ்மாயில் சப்ரியின் உடல் நிலை சீராக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் அஸ்ரான் பித்ரி ரஹிம் ( Azran Fitri Rahim ) தெரிவித்தார்.