
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-11, பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் தவறுதலாகத் தன்னைத் தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட போலீஸ்காரர் மரணமடைந்துள்ளார்.
பினாங்கு மருத்துவமனையில் 2 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த காப்பரல் ஃபிரான்சிஸ் அற்புதத்தின் உயிர், நேற்று மாலை 5.12 மணிக்கு பிரிந்தது.
பினாங்கு போலீஸ் தலைமையகத்தில், நிர்வாகத் துறையின் கமாண்டன் படையில் பணியாற்றி வந்த 58 வயது ஃபிரான்சிஸ், ஏப்ரல் 8-ஆம் தேதி அங்குள்ள பாதுகாவலர் அறையில் தலையில் காயங்களுடன் காணப்பட்டார்.
அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா தலையில் பாய்ந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, 1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பல்வேறு கோணங்களில் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டும் வந்தது.
இவ்வேளையில், அன்னாரின் மறைவுக்கு பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஃபிரான்சிஸை இழந்துத் துயரும் குடும்பத்தார் இச்சோதனையிலிருந்து மீண்டு வரவேண்டுமென, facebook-கில் வெளியிட்ட அனுதாபச் செய்தியில் அவர் சொன்னார்.