
கோலாலம்பூர், செப்டம்பர்-23 – 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காலாண்டுச் சாதனை மதிப்பை பதிவுச் செய்துள்ள ரிங்கிட் நாணயம், அந்நிலையை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 12 விழுக்காடுக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.
1973-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் ரிங்கிட்டின் மதிப்பு இவ்வளவு உயர்ந்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
இதன் வழி, வளர்ந்து வரும் சந்தை நாணயங்களிலேயே மிகச் சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்த நாணயமாகவும் ரிங்கிட் விளங்குகிறது.
இந்நிலையில், மத்திய வங்கியான பேங்க் நெகாரா வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தவிர்க்கும் என்பதால், ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு நீடிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்காவுடனான விகித வேறுபாடுகளைக் குறைத்தல், வர்த்தக செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் கவர்ச்சிக்கரமான சொத்து மதிப்பீடு ஆகிய நடவடிக்கைகள், ரிங்கிட்டை மேலும் வலுப்படுத்த உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.
ஆக்ககரமான பரிமாற்று விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், ரிங்கிட்டின் மதிப்பீடு நீண்ட கால அடிப்படையில் கவர்ச்சிகரமானது மற்றும் மலிவானது என்பதில் சந்தேகமில்லை என ஆய்வாரளர்கள் கூறுகின்றனர்.
என்றாலும், அரசாங்க மானிய சீர்திருத்தங்களில் காணப்படும் முன்னேற்றங்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறை குறித்த தகவல்களுக்காக, அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2025 பட்ஜெட்டை வர்த்தகர்கள் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.