
கோலாலம்பூர், நவ-04-Quacquarelli Symondsசின் (QS) 2027ஆம் ஆண்டுக்கான ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசையில், மலேசிய தேசியப் பல்கலைக்கழகமான UKM நான்கு இடங்கள் முன்னேறி 20ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் முதன்முறையாக ஆசியாவின் முதல் 20 பல்கலைக்கழகங்களுக்குள் அது நுழைந்திருக்கிறது. அதேவேளை, மலாயா பல்கலைக்கழகம் (UM) 15ஆவது இடத்திலிருந்து 17ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. என்றாலும், மலேசியாவின் முதல்நிலை பல்கலைக்கழகமாக அது நீடிக்கிறது.
கடந்தாண்டு தரவரிசையில் இடம்பெற்ற 49 மலேசியப் பல்கலைக்கழகங்களில், 25 பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன; 20 பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. நான்கு பல்கலைக்கழகங்கள் தங்களது நிலையைத் தக்கவைத்துள்ளன. மேலும், ஆறு புதிய பல்கலைக்கழகங்கள் இணைந்ததால், இம்முறை மலேசியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 17 பல்கலைக்கழகங்கள் இதுவரை இல்லாத உயர்ந்த தரவரிசையைப் பெற்றுள்ளன.
ஆசியா முழுவதும் 1,722 பல்கலைக்கழகங்களை 11 அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிட்ட அத்தரவரிசையில், அனைத்துலக ஆராய்ச்சி ஒத்துழைப்பில் UKM குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அப்பிரிவில் நான்கு இடங்கள் முன்னேறி ஆசிய அளவில் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாறாக, UM மதிப்பிடப்பட்ட 11 பிரிவுகளில் ஆறில் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, முதலாளிகளிடையேயான நற்பெயர் பிரிவில் ஏழு இடங்கள் சரிந்து 17ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இவ்வேளையில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) ஏழு இடங்கள் முன்னேறி 27ஆவது இடத்தையும், சன்வே பல்கலைக்கழகம் 47ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. Universiti Teknologi Petronas, 51ஆவது இடத்திற்கும், Universiti Utara Malaysia, 82ஆவது இடத்திற்கும் சரிந்துள்ளன. INTI அனைத்துலக பல்கலைக்கழகம் 122ஆவது இடத்திலிருந்து 86ஆவது இடத்திற்கு முன்னேறி முதன்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
இவ்வேளையில் அனைத்துலக மாணவர்களை ஈர்ப்பதில் மலேசியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அப்பிரிவில் 31 மலேசியப் பல்கலைக்கழகங்கள் ஆசியாவின் முதல் 100 இடங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் QS குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஆசியாவின் முதல் 50 இடங்களில் மலேசியாவின் எட்டு பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.



