
கோலாலம்பூர், ஜூலை-23-அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையத்தின் அனைத்து அகதிகள் பதிவு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
DPP எனும் அகதிகள் பதிவு ஆவணத் திட்டத்தின் மூலம் அகதிகள் நிர்வாக முறை மறுசீரமைக்கப்படும் வரை அவ்வாறு செய்யப்படும் என துணை வெளியுறவு அமைச்சர் Lukanisman Awang Sauni தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், அகதிகள் மிகவும் கட்டுக்கோப்பான முறையில் பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
DPP திட்டத்தின் மூலம், வெளிநாட்டு அமைப்புகளின் பதிவுகளைச் சார்ந்திராமல், அடையாளச் சரிபார்ப்பு, கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை உள்ளிட்ட தரவுகளை அரசாங்கத்தால் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
அதோடு தகுதியுள்ள நபர்கள் மட்டுமே பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யவும், சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், பல்வேறு அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து DPP திட்டத்தின் கீழ் அகதிகள் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதனைத் தவிர்த்து தடுப்பு முகாம்களில் உள்ள சுமார் 5,000 மியன்மார் நாட்டினரை அந்நாடு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் பட்சத்தில், மலேசியக் கடற்படைக் கப்பல்கள் மூலம் தாயகம் திருப்பியனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் Lukanisman விளக்கினார்.
மியன்மாரால் அங்கீகரிக்கப்பட்ட குடியுரிமையோ அல்லது அடையாள ஆவணங்களோ இல்லாத Rohingya அகதிகள் விவகாரத்தைக் கையாள்வது மீதான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மேலவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.



