Latestமலேசியா

“Who Wants To Be A Scientist? 2026” போட்டியின் முதல் சுற்றில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கோலாலாம்பூர், மே-25-மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட “Who Wants To Be A Scientist? 2026” தேசிய அளவிலான STEM போட்டியின் முதல் சுற்று கடந்த சனிக்கிழமை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமான UKM இந்திய மாணவர் பிரதிநிதித்துவ அமைப்பு மற்றும் ‘வணக்கம் மலேசியா’ ஊடகத்தின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் சுற்றில், நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட ஐந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

PAJSK எனப்படும் பள்ளி இணைப்பாட நடவடிக்கைக்கான புள்ளிகள் இல்லாத நிலையிலும், AI தொழில்நுட்ப செயலி வழி நடைபெற்ற இந்த இயங்கலைப் போட்டியில் பெற்றோர்களும் மாணவர்களும் காட்டிய ஆர்வம் வியக்க வைத்தது.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் கொண்ட 40 இருமொழிக் கேள்விகளுக்கு, மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டிய தங்களின் பொது அறிவைக் கொண்டு திறம்படப் பதிலளித்தனர்.

வெற்றி இயக்கம், மலேசிய வேதாதிரி அமைப்பு, மலேசிய உயிரியல் தொழில்நுட்ப மையமான MABIC மற்றும் உலகத் தரம் வாய்ந்த IEEE EDS ஆகிய அமைப்புகள் இதற்குப் பக்கபலமாகச் செயல்பட்டன.

இந்த முதல் சுற்றிலிருந்து தேர்வாகும் 90 மாணவர்கள், வரும் ஜூலை 25-ஆம் தேதி UKM-மில் நேரடியாக நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகளில் மோதுவர்.

நவீன அறிவியல் தொழில்நுட்பமே நமது அடுத்த தலைமுறையின் உலகளாவிய ஆயுதம் என்ற கோட்பாட்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களை வருங்கால அறிவியல் உலகிற்குத் தயார்படுத்தும் ஒரு மைல்கல்லாக இப்போட்டி அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!