
ஷா ஆலாம், செப். 4 – அம்னோ தலைவர் Datuk Sei Dr Ahmad Zahid Hamidi மீது சுமத்தப்பட்ட 47 ஊழல், நம்பிக்கைத் துரோகம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை மறுஆய்வு செய்யுமாறு Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் தேசிய சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், Zahid Hamidi மீதான சட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. 47 குற்றச்சாட்டுகளும் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில், அதில் ஏன் மாறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என ராயர் வினவினார்.
கடந்த ஜனவரி மாதம், Zahid Hamidiயுடன் தொடர்புடைய ‘Yayasan Akalbudi’ நிதி முறைகேடு வழக்கில், நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தேசிய சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்திருந்தது. அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே தமது கோரிக்கை என ராயர் குறிப்பிட்டார்.
எந்தவொரு நபரையும் முன்கூட்டியே குற்றவாளி என அறிவிப்பது தமது நோக்கம் அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதி செய்வதே தமது முக்கிய தமது நோக்கம் என அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் எதிரிகளுக்கு ஒரு விதமான அளவுகோலும், அரசியல் கூட்டாளிகளுக்கு வேறொரு விதமான அளவுகோலும் இருக்கக் கூடாது.
Zahid Hamidi மீதான வழக்கு கைவிடப்பட்டதற்கும், பிற ஊழல் வழக்குகளில் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் கடுமையான நிலைப்பாட்டிற்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து தேசிய சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



