
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27- அரிதான ஒரு நிகழ்வாக, நாட்டின் மூன்று முன்னாள் பிரதமர்கள் இன்று வெவ்வேறு சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு கோலாலம்பூர் நீதிமன்றப் படிகளை ஏறியுள்ளனர். டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், டான் ஸ்ரீ முஹிடின் யாசின், டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகியோரே அம்மூன்று முன்னாள் பிரதமர்கள் ஆவர். அதனை அடுத்து ஒரு சாதாரண நீதிமன்ற நாள் இன்று வழக்கத்திற்கு மாறாக முன்னாள் தேசியத் தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வாக மாறியுள்ளது.
நஜிப், 1Malaysia Development Bhd (1MDB) நிறுவனம் தொடுத்துள்ள பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிவில் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். 1MDB விவகாரத்தின் மையமாகத் திகழும் பரிவர்த்தனைகள் மற்றும் முடிவுகள் குறித்த சாட்சியங்களுடன் விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1MDB நிறுவனம் சந்தித்த இழப்புகளுக்காக அது, பெக்கான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான நஜிப் மற்றும் பிற பிரதிவாதிகளிடமிருந்து பல பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைக் கோருகிறது.
இவ்வேளையில் மற்றொரு நீதிமன்ற அறையில், முஹிடின் யாசினுக்கு எதிராக Jana Wibawa திட்டம் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை தொடருகிறது. பெர்சத்து கட்சியின் அந்தத் தலைவர், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி கட்சிக்கு R32.5 மில்லியன் ரிங்கிட் கையூட்டுப் பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகளையும், 200 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீதான வழக்கும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. ஊழல் தடுப்பு ஆணையம் MACC கோரிய சொத்துக்களை அறிவிக்கத் தவறியது தொடர்பில் அவர் குற்றச்சாட்டை எதிர்கொண்டார். எனினும் இஸ்மாயில் சப்ரி அக்குற்றச்சாட்டை மருத்து விசாரணை கோரியுள்ளார். அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்படவிருந்த நிலையில், சுகாதாரக் கோளாறுகள் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாணயங்களில் சுமார் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணமும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையதாக 16 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக MACC வெளியிட்ட தகவலையடுத்து, அந்த விசாரணை கவனத்தை ஈர்த்தது.



