
குவாந்தான் , பிப்ரவரி-25தனது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தின் வாகனங்களை சீரமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் வேலைகள் வழங்கியதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஊராட்சி மன்றத்தின் ஓய்வு பெற்ற பணியாளர் ஒருவரை பினாங்கு MACC தடுத்து வைத்துள்ளது.
அந்த சந்தேகப் பேர்வழியை மார்ச் 1 ஆம்தேதிவரை ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் நுர் பாட்ரினா சுல்கைரி
(Nur Fadrina Zulkhairi) பிறப்பித்தார்.
இன்று காலை ஜோர்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் MACC செய்து கொண்ட மனுவைத் தொடர்ந்து 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை தடுத்து வைக்கும் உத்தரவுக்கு அனுமதி பெறப்பட்டது.
நேற்று மதியம் 1 மணியளவில் பினாங்கு MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு தனது பதவியைப் பயன்படுத்தி தனது மனைவியின் நிறுவனத்தை அவர் பணிபுரிந்த அலுவலகத்தின் வாகனங்களை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்புக்காக சுமார் 700,000 ரிங்கிட் தொகைக்கு நியமித்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே அந்த முன்னாள் பணியாளர் கைது செய்யப்பட்டதை பினாங்கு MACC யின் இயக்குனர் டத்தோ கருணாநிதி சுப்பையா உறுதிப்படுத்தியதோடு இந்த விவகாரம் 2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 23 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.



