
சுங்கை பூலோ, செப்டம்பர்-27,
நேற்று அதிகாலை 1 மணிக்கு, சுங்கை பூலோ மேம்பால உணவகத்திற்கு அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது முதியவரை போலீஸார் கைதுச் செய்தனர்.
வெள்ளிக்கிழமை காலை முதல் டிக் டோக்கில் வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸ் விசாரணையில் இறங்கியதாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் கூறியது.
அதே நாளில், சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டு கைதுச் செய்யப்பட்டார்.
80 வயது அவ்வாடவருக்கு பழையக் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படும் ஓட்டுநர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.