கோலாலம்பூர், ஜூலை 11 – பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை நிலைநிறுத்திய, மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல்லின் (Johari Abdul) முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி விளக்கத்தை மட்டும் சுட்டிக்காட்டிய எதிர்கட்சியினரின் செயலை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடியுள்ளார்.
மாறாக, அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடங்களை காலி செய்ய பெர்சத்து செய்திருந்த விண்ணப்பத்தை நிராகரிக்க, ஜொஹாரி முழு சட்ட விளக்கத்தையும் அளித்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை நிலைநிறுத்திய மக்களவைத் தலைவரின் செயல், அரசியலமைப்புச் சட்டத்தின் 49A உட்பிரிவு மூன்றுக்கு எதிரானது என நேற்று பெர்சத்து தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் குற்றம்சாட்டியிருந்தார்.
அந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.
பாக்காத்தான் ஹராப்பான் எதிர்கட்சியாக இருந்த போது, கட்சியிலிருந்து நீக்கப்படும் உறுப்பினர்கள், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற இடங்களை காலி செய்ய வேண்டும் என, நாங்கள் பரிந்துரையை முன் வைத்தோம். ஆனால், பெர்சத்து அதனை நிராகரித்து விட்டது.
அதனால் தான், அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதாக, பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய ஏதுவாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 49A பிரிவின் கீழ், தொகுதியை காலி செய்ய தேவையில்லை என, நேற்று முன்தினம் ஜொஹாரி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.