
அலோர் ஸ்டார், அக்டோபர் 21 – அலோர் ஸ்டார், மெர்கோங் (Mergong) பகுதியில் கோயில் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி, 80 விழுக்காடு தீக்காயமடைந்த 16 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.
கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷேட் பஸ்ரி ஷேட் அலி (Syed Basri Syed Ali) கூறுகையில், அந்தச் சிறுவன் அதிகாலை 2.52 மணிக்கு மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஊர்வலத்தில் கொடிக்கம்பத்தை ஏந்திச் சென்றபோது, அது உயரத்தில் இருந்த மின்சாரக் கம்பியைத் தொட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர்.
காயமடைந்த மற்ற இருவரில் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். மற்றொருவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உடற்கூறு பரிசோதனை நடத்தப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.



