
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-23,சாலையில் மற்ற வாகனமோட்டுநர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் Porsche Cayenne சொகுசுக் காரை ஆபத்தான முறையில் ஓட்டிய 56 வயது ஆடவருக்கு, 5 நாட்கள் சிறைத் தண்டனையும் 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Woo Hong Jiang என்ற அந்த ஆடவர், நேற்று பெட்டாலிங் ஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மேஜிஸ்திரேட் அத்தீர்ப்பை வழங்கினார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது ஓட்டுநர் உரிமமும் 5 ஆண்டுகளுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி, பிற்பகல் 2 மணியளவில், பண்டார் கின்றாரா அருகே பூச்சோங்கிலிருந்து புக்கிட் ஜாலில் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அவர் ஆபத்தான முறையில் காரை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகள், அவர் மற்ற வாகனமோட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டது நீதிமன்றத்தில் நிரூபணமாகி தண்டனையும் கிடைத்துள்ளது.



