
கோலாலம்பூர், மே-இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்க, மாணவர்கள் இன்னமும் சிக்கலை எதிர்நோக்கி வருவது குறித்து, SMC எனப்படும் ஸ்ரீ முருகன் நிலையம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
10 முதல் 15 மாணவர்கள் வரை இருந்தாலே POL எனப்படும் தாய்மொழி வகுப்புகளை நடத்த தேசியக் கல்விக் கொள்கை அனுமதி அளிக்கிறது.
ஆனால், பல பள்ளிகளில் இன்னமும் அதற்குப் போராட வேண்டியிருப்பதாக, SMC இயக்குநர் சுரேன் கந்தா ஆவேசத்துடன் கூறினார்.
2014-ஆம் ஆண்டு தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டில் காலடி வைத்த மாணவர்களின் எண்ணிக்கை, 13, 688 ஆகும்; ஆனால் அவர்கள் ஐந்தாம் படிவத்தை அடைந்த போது அவர்களில் SPM தேர்வில் தமிழ் மொழி பாடத்திற்கு அமர்ந்தவர்கள் வெறும் 7,609 பேர் மட்டுமே.
அப்படியானால் எஞ்சியவர்கள் எங்கே, என்ன நடந்தது என சுரேன் கேள்வி எழுப்பினார்.
இடைநிலைப் பள்ளிகளில் தாய்மொழி வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே 2023-ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார்.
ஆனால், நடப்பது என்னவோ சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுப்பதில்லையே என்பது போலத்தான் உள்ளது என சுரேன் ஏமாற்றம் தெரிவித்தார்.
பிரச்னை நடக்கும் பள்ளிகளில் எல்லாம் கல்வி முறையைக் காரணம் கூறுகிறார்கள்; எனவே கல்வி அமைச்சு பள்ளி நிர்வாகங்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றார் அவர்.
இது இன்று நேற்றையப் பிரச்னை அல்ல; ஏற்கனவே சமுதாயத் தலைவர்கள் பலர் அரசாங்கத்தின் காதுகளுக்குக் கொண்டுச் என்ற பழையப் பிரச்னை தான்.
ஆனால், இனியும் தாங்கள் பொறுமைக் காக்கப் போவதில்லை எனக் கூறிய சுரேன், சாக்குபோக்குகளைக் கூறி தமிழ் மொழி வகுப்புகளை நடத்த அனுமதி மறுக்கும் இடைநிலைப் பள்ளி நிர்வாகங்கள் குறித்து SMC-யிடம் புகாரளிக்குமாறு சுரேன் கேட்டுக் கொண்டார்.
மொழி வளர்ந்தால் இனம் வளரும், இனம் வளர்ந்தால், நாடு செழிக்கும் எனக் கூறிய சுரேன், இந்த விவகாரத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் இனி முழு மூச்சாக களமிறங்கும் என்றார்.



