
மலாக்கா, அக்-27-இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவங்களில் மலேசியத் தோட்ட நிறுவனங்களுக்குத் தொடர்பில்லை. அந்நாட்டு அரசு சாரா அமைப்பு ஒன்று முன்வைத்துள்ள அத்தகையக் குற்றச்சாட்டுகளை மலேசிய அரசாங்கம் மறுத்துள்ளது.
மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் (MPOB) கண்காணிப்புத் தரவுகளின்படி, அடையாளம் காணப்பட்ட தீச்சம்பவங்கள் மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் தொடங்கவில்லை என தோட்டத்தொழில் மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சர் Datuk Seri Dr Noraini Ahmad தெரிவித்தார். மாறாக, தீ மற்ற பகுதிகளிலிருந்து பரவியுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
அதோடு மலேசியத் தோட்ட நிறுவனங்கள் நிலையான செம்பனை எண்ணெய் வட்டமேசை (RSPO) மற்றும் மலேசிய நிலையான செம்பனை எண்ணெய் (MSPO) சான்றிதழ் திட்டம் உள்ளிட்ட நிலைத்தன்மைத் தரநிலைகளைப் பின்பற்றுகின்றன. இத்தரநிலைகளின்படி, திறந்தவெளியில் பயிர்க் கழிவுகளை எரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மற்றும் நிலத்தீச் சம்பவங்களில் மலேசியாவுடன் தொடர்புடைய 21 நிறுவனங்களுக்குப் பங்கு இருப்பதாக சம்பந்தப்பட்ட அந்த அரசு சாரா அமைப்பு முன்னதாகக் குற்றம் சாட்டியிருந்தது. அதன் தொடர்பில் Dr Noraini அவ்வாறு தெளிவுபடுத்தினார்.



