
ஈப்போ, அக்டோபர்-28, இலக்கிடப்பட்ட பெட்ரோல் மானியங்களுக்கு T15 உயர் வருமானம் பெறுவோருக்கான வருமான வரம்பை அரசாங்கம் இன்னும் நிர்ணயிக்கவில்லை.
அது தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பணக்காரர்கள் மட்டுமே பெட்ரோலுக்கான அசல் விலையைக் கொடுக்க வேண்டும்; மற்ற 85 விழுக்காட்டு மக்களும் மானியத்தை அனுபவிப்பதை உறுதிச் செய்ய வேண்டியிருப்பதால் அவ்விவகாரம் கவனமாகக் கையாளப்பட வேண்டுமென்றார் அவர்.
குடும்ப வருமானம் அடிப்படையில் T15 வர்கத்தினராக உள்ள அனைவராலும் மானியம் இல்லாமல் சமாளிக்க முடியுமா என்பதையும் அரசாங்கம் பார்க்க வேண்டியுள்ளது.
அதே சமயம் 1 லட்சம் ரிங்கிட்டிலிருந்து 10 லட்சம் ரிங்கிட் வரையில் மாத வருமானம் கொண்ட T15 வர்கத்தினருக்கு மானியம் வழங்கும் பேச்சுக்கும் இடமில்லை என நிதியமைச்சருமான அன்வார் சொன்னார்.
2025 பட்ஜெட் தாக்கலின் போது, T15 உயர் வருமானம் பெறுவோருக்கான அரசாங்க மானியங்கள் நிறுத்தப்படுமென பிரதமர் கூறியிருந்தார்.
எனினும், உண்மையிலேயே தகுதிப் பெற்றவர்களும், பெட்ரோலுக்கான மானியங்களைப் பெறுவதிலிருந்து விடுபடுவதைத் தவிர்க்க, குடும்ப வருமான வரம்பு வகைப்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.