உலகக் கிண்ண கால்பந்து 2026; போட்டி வெற்றியாளர்களை கணிக்கும் மெக்சிகோ பூங்கா விலங்குகள்!

மெக்சிகோ சிட்டி, ஜூன்-7-உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நெருங்கி வரும் வேளையில், மெக்சிகோவில் உள்ள விலங்குகள் சில, சுவாரசியமான முறையில் போட்டிகளின் வெற்றியாளர்களைக் கணித்து கால்பந்து இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மெக்சிகோவின் குவாடலஹாரா (Guadalajara) உயிரியல் பூங்காவில் உள்ள யானைகள், கொரில்லாக்கள், சிறுத்தைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற விலங்குகளுக்கு முன்னால், போட்டியிடும் நாடுகளின் கொடிகள், பலகைகள் மற்றும் உணவுகள் வைக்கப்பட்டன.
அதில் விலங்குகள் எதைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த கணிப்புகள் நடத்தப்பட்டன.
அதன்படி, அங்குள்ள யானைகள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மெக்சிகோ வெல்லும் என்றும், கொரில்லாக்கள் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவே வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளன.
மேலும், ஒரு சிறுத்தை செக் குடியரசுக்கு எதிராக தென் கொரியாவையும், ஒட்டகச்சிவிங்கிகள் கொலம்பியாவுக்கு எதிராக காங்கோ குடியரசையும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளன.
கடந்த காலங்களில் Paul the Octopus என்ற கணவாய் உலகக் கிண்ணப் போட்டிகளைத் துல்லியமாகக் கணித்து உலகப் புகழ்பெற்றதைத் தொடர்ந்து, தற்போது மெக்சிகோ பூங்கா விலங்குகளின் இந்தக் கணிப்புகளும் உலகக் கிண்ணக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சுவாரசியத்தை கூட்டியுள்ளன.
இந்த விலங்குகளின் கணிப்புகள் நிஜமாகுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…



