
நியூ யார்க், ஜூன் 8 – ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள பென்
( Penn ) ரயில் நிலையத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஐவர் காயம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் பொதுமக்கள் என்றும், அவர்களில் ஒருவர் பலத்த காயங்களுடனும், இருவர் மிதமான காயங்களுடனும், மற்ற இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என நியூயார்க் தீயணைப்புத் துறை தகவல் வெளியிட்டது.
இருப்பினும், கத்திக்குத்துக்கான காரணமும், அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகளும் இன்னும் தெரியவில்லை.
இந்த வாரம் நியூயார்க், NBA இறுதிப் போட்டி மற்றும் உலகக் கிண்ண காற்பந்து போட்டி ஆகிய இரண்டு விளையாட்டு நிகழ்வுகளை நடத்தத் தயாராகி வரும் வேளையில், அமெரிக்காவின் மிகவும் பரபரப்பான ரயில் மற்றும் சுரங்கப்பாதை போக்குவரத்து மையங்களில் ஒன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள பென் ரயில் நிலையத்திற்கு மேலே அமைந்துள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டன் ( Madison Square Garden ) அரங்கத்தில், நியூயார்க் நிக்ஸ்( New York Knicks) மற்றும் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் ( San Antonio ) அணிகளுக்கு இடையேயான NBA இறுதிப் போட்டியின் மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்கள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும்.
இதனிடையே அண்டை மாநிலமான நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைப் ( MetLife) விளையாட்டரங்கில் , சனிக்கிழமையன்று உலகக் கிண்ண காற்ப்ந்து போட்டியின் தொடக்க ஆட்டம் நடைபெறும்.
நியூயார்க் நிக்ஸ் அணியின் உரிமையாளர் ஜேம்ஸ் டோலனிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை நடைபெறும் NBA இறுதிப் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னதாக நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



