
கோலாலம்பூர், செப்டம்பர்-30,மலாயா பல்கலைக்கழகமான UM, உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம்பெற்ற முதல் மலேசியப் பல்கலைக்கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
Times Higher Education உலகப் பல்கலைக்கழகத் தர வரிசை 2027-ல், UM 194-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் 351 முதல் 400 வரையிலான தரவரிசைப் பிரிவில் இருந்த UM, தற்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவுச் செய்துள்ளது.
உலகளவில் 2,297 பல்கலைக்கழகங்களில் முதல் 8.5 விழுக்காட்டுக்குள் UM இடம்பெற்றுள்ளது.
UM துணைவேந்தர் டத்தோ ஸ்ரீ பேராசிரியர் Dr நூர் அசுவான் அபு ஒஸ்மான், இந்தச் சாதனை பல்கலைக்கழக ஊழியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பங்காளிகளின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என வருணித்தார்.
உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றது இறுதி இலக்கு அல்ல என்றும், உலகளவில் UM-ன் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை இது காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கற்பித்தல், ஆராய்ச்சி, ஆராய்ச்சித் தரம், தொழில்துறை பங்களிப்பு மற்றும் அனைத்துலகக் கண்ணோட்டம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்தத் தர வரிசை நிர்ணயிக்கப்படுகிறது.



