
கோலாலம்பூர், ஜூலை-20-KWAP எனும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியத்தின் முதலீடுகள் தொடர்பான ஊழல் அல்லது முறைகேடுகள் ஏதும் தெரிய வந்தால், அரசாங்கம் அதனைச் சகித்துக் கொள்ளாது. பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அவ்வாறு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
ஆரம்பக் கட்ட அறிக்கைகள் அத்தகைய மோசடிகள் எதையும் காட்டவில்லை. இருப்பினும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC முழு முதலீட்டு செயல்முறையையும் கூர்ந்து ஆராய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும், நாட்டின் ஓய்வூதிய நிதிகளான ஊழியர் சேமநிதி (EPF), KWAP ஆகியவை எவ்வாறு சிறந்த ஈவுத் தொகையை வழங்க முடியும் என்பது குறித்த மேலவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அன்வார் பதிலளித்தார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘eFishery’ எனும் மீன் வளர்ப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தில் KWAP மேற்கொண்ட 160 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு இழப்பு குறித்து பேசிய பிரதமர், அது பிற உலக நிதி மேலாளர்களையும் ஏமாற்றிய ஒரு திட்டமிட்ட அனைத்துலக மோசடியின் விளைவு என விளக்கினார்.
இச்சம்பவம் முதலீட்டு நிர்வாகத்தில் உள்ள இடர்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் செயல்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என உறுதியளித்தார்.



