பெட்டாலிங் ஜெயா, மே 31 – கிள்ளான் பள்ளத்தாக்கில், LRT, Monorel மற்றும் MRT சேவைகளை இயக்கும் ரேபிட் ரேல் நிறுவனம், கடந்த புதன்கிழமை மட்டும், ஒரே நாளில் 1 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்துள்ளது.
2002-ஆம் ஆண்டு, அந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பதிவுச் செய்யப்பட்டிருக்கும் அதிகபட்ச சாதனை அதுவென, ரேபிட் ரேல் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை, கெலானா ஜெயா வழிப்பாதையில் இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் பயணித்த வேளை ; அடுத்ததாக அம்பாங் ஸ்ரீ பெட்டாலிங் சேவையை இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 184 பேர் பயன்படுத்தினர்.
மோனொரேல் சேவையை 61 ஆயிரத்து 236 பேரும், காஜாங் வழிப்பாதைக்கான சேவையை இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 302 பேரும், புத்ராஜெயாவுக்கு ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 767 பேரும் பயணித்தனர்.
அதனால், அன்றைய நாள், ரேபிட் ரேல் சேவைகளை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்து நான்காயிரத்து 591 பேராக பதிவானது.
கடந்தாண்டு, இதே காலகட்டத்தில் பதிவுச் செய்யப்பட்ட ஏழு லட்சத்து 39 ஆயிரத்து 818 பயணிகளை காட்டிலும், அந்த எண்ணிக்கை அதிகமென ரேபிட் ரேல் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
கெலானா காஜாங் வழித்தடத்திற்கான இரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, மஸ்ஜிட் ஜாமிக் – பண்டாராயா இடையிலான சேவையை மீண்டும் அறிமுகம் செய்தது, வழி நெடுகிலும், புதிய கவர்ச்சிகரமான இடங்கள் திறக்கப்பட்டிருப்பது ஆகியவையும், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வித்திட்டுள்ளதாக ரேபிட் ரேல் நிறுவனம் கூறியுள்ளது.