
குவாந்தான், ஏப்ரல்-25- பஹாங், குவாந்தானில் பூனைக் குட்டி சாகும் அளவுக்கு அதனை நாயிடம் கடிக்கக் கொடுத்து 3 சிறுவர்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் வைரலாகியுள்ளது. CCTV வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் கொதித்துப் போயுள்ளனர்.
ஊரார் வீட்டு வளாகத்தில் அனுமதியின்றி அவர்கள் எகிறி குதிப்பதும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. குவாந்தான், ஸ்ரீ செத்தாலியில் நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவத்தின் CCTV காட்சிகளை, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் facebook-கில் பதிவேற்றியதாக நம்பப்படுகிறது.
அம்மூன்று சிறார்களும், வேலி போடப்பட்ட வீட்டின் ஓரமாக முதலில் விளையாடிக் கொண்டிருப்பது 40 வினாடி அவ்வீடியோவில் தெரிகிறது.
அவர்கள் அங்கு விளையாடுவதை கண்டு, அவ்வீட்டினுள் இருந்த 2 நாய்கள் அங்குமிங்கும் ஓடுவதையும் காண முடிகிறது.
அவர்களில் ஒருவன், திடீரென எங்கிருந்தோ பூனைக் குட்டியொன்றை கையில் தூக்கி வந்து, வேலிக்கு வெளியிலிருந்து அவ்விரு நாய்களிடம் நீட்டி நீட்டி விளையாடினான். பிறகு, மூவருமாக வேலி ஏறி குதித்து, கதவின் ஓரமாக பூனைக் குட்டியை வைத்து விட்டனர்; நாய்களும் அந்தப் பூனைக் குட்டியைக் கடித்துக் கொன்று விட்டன.
வலைத்தளவாசிகள், இம்மூவரும் குறும்புக்கார சிறுவர்கள் அல்ல; மாறாக ‘மனநோயாளிகள்’ அதுவும் மற்ற உயிரினம் சாவதையோ துன்பப்படுவதையோ பார்த்து இரசிப்பவர்கள் என கடுமையாகச் சாடி வருகின்றனர். இப்படியே விட்டால் எதிர்காலத்தில் ‘கொலைக்காரர்களாகி’ விடுவார்கள் என்றும் கருத்துகள் குவிந்து வருகின்றன.