Latestஉலகம்

கராம் மசாலா தூளால் வந்த வினை: 57 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த தொழிலதிபருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

டெல்லி, மே-23 – உங்கள் சூட்கேஸ் பயணப் பெட்டியில் இருந்த சமையல் மசாலா தூள்களுக்காக, நீங்கள் இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்?

கற்பனை செய்யவே பயமாக இருக்கும் இந்த அதிர்ச்சி சம்பவம் ஒரு இந்திய தொழிலதிபருக்கு நிஜமாகவே நடந்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் இப்போது ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

​கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம், தொழிலதிபர் அஜய் சிங் என்பவர் மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து மலேசியா செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்தார்.

அப்போது அவரது பையில் இருந்த ‘ஆம்சூர்’ மற்றும் ‘கராம் மசாலா’ பாக்கெட்டுகளை சோதித்த விமான நிலைய இயந்திரங்கள், அவற்றில் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் இருப்பதாக தவறான எச்சரிக்கையைக் காட்டின.

இதனால் அவர் உடனடியாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டார்.

​உள்ளூர் தடயவியல் ஆய்வகத்தில் இந்த மசாலா தூள்களை சோதிப்பதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாததால், இந்த கொடுமை 57 நாட்களுக்கு நீடித்தது.

இறுதியாக, அந்த மாதிரிகள் ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்டு, அவை வெறும் மசாலா தூள் தான் என்று அறிக்கை வர இரண்டு மாதங்கள் ஆனது.

​இந்நிலையில், தற்போது தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், மாநிலத்தின் மந்தமான தடயவியல் உள்கட்டமைப்பை கடுமையாக சாடியுள்ளது.

மேலும், அஜய் சிங்கின் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டதற்காக அவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் எந்தவொரு நிரபராதி பயணியும் இது போன்ற ஒரு கொடுமையை சந்திக்கக் கூடாது என்பதற்காக, அனைத்து வட்டார தடயவியல் ஆய்வகங்களையும் உடனடியாக ஆய்வு செய்து தரம் உயர்த்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!