
காஜாங், மே-19-சிலாங்கூர், காஜாங்கில் 12.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இறைச்சிக் கடத்தல் மற்றும் விநியோகக் கும்பலைச் சேர்ந்த 5 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் Op Taring Chiller என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார் 167 டன் எடையுள்ள சட்டவிரோத இறைச்சிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் சீனா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படும் 4,840 அட்டைப்பெட்டி பன்றி இறைச்சிகள், 410 அட்டைப்பெட்டி கோழி இறக்கைகள் மற்றும் 115 அட்டைப்பெட்டி வாத்து இறைச்சிகள் அடங்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவு வணிகம் என்ற போர்வையில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த கும்பல், போலி ஆவணங்கள் மூலம் அங்கீகரிக்கப்படாத இறைச்சிகளை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
மேலும், இவர்கள் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளுடன், ஹலால் அல்லாத இறைச்சிப் பொருட்களைக் கலந்து, உள்ளூர் சந்தையில் குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒரு உள்ளூர் ஆடவரும் 4 மியன்மார் நாட்டவரும் அடங்குவர்.
இக்கும்பலின் மூளையாகச் செயல்பட்ட முக்கிய நபர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



