Latestமலேசியா

காயம், அலர்ஜி, தூக்கமின்மையையும் வென்ற விடாமுயற்சி; 7 நாட்களில் 12 மலைகளை ஏறி சாதனைப் பயணத்தை நிறைவு செய்த லோகசந்திரன்

கோலாலம்பூர், செப்டம்பர் 2 – கால் காயம், கடுமையான தசைப்பிடிப்பு, விசப் பூச்சி கொட்டியதால் ஏற்பட்ட அலர்ஜி, தூக்கமின்மை, மோசமான வானிலை என அடுத்தடுத்து வந்த சவால்களையும் கடந்து, 7 நாட்களில் 7 மாநிலங்களில் 12 மலைகளை ஏறும் தனது சாதனைப் பயணத்தை மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

நாட்டின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி ஜோகூரில் உள்ள Gunung Ledang மலையிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய லோகசந்திரன், செப்டம்பர் 1ஆம் தேதி அதிகாலை பஹாங்கில் உள்ள Gunung Siku மலையின் உச்சியை அடைந்து தனது சவாலை நிறைவு செய்தார்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது 11ஆவது மலையான Gunung Ruil-ஐ இரவு 8.37 மணிக்கு ஏறத் தொடங்கிய அவர், இரவு 9.45 மணிக்கு அதன் உச்சியை அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, நள்ளிரவைக் கடந்தும் ஓய்வின்றி தனது இறுதி இலக்கை நோக்கிப் பயணித்த லோகசந்திரன், செப்டம்பர் 1ஆம் தேதி அதிகாலை 12.27 மணிக்கு 12ஆவது இறுதி மலையான Gunung Siku-வை ஏறத் தொடங்கினார். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அதிகாலை 3.19 மணிக்கு உச்சியை அடைந்து தனது சாதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்த ஏழு நாள் பயணம் அவருக்கு எளிதான ஒன்றாக அமையவில்லை. கால் காயம் மற்றும் கடுமையான தசைப்பிடிப்பால் அவதியுற்ற அவர், சில கட்டங்களில் மருத்துவ சிகிச்சையையும் பெற்றுக்கொண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

அதுமட்டுமின்றி, அலர்ஜி காரணமாக உடல் முழுவதும் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளையும் எதிர்கொண்டார். தூக்கமின்மை, உடல் சோர்வு, மோசமான வானிலை, மாநிலங்களுக்கு இடையிலான நீண்ட நேரப் பயணம் மற்றும் தாமதங்கள் எனப் பல தடைகள் அவரது திட்டமிட்ட நேர அட்டவணையையும் பாதித்தன.

இத்தனை சவால்கள் வந்தபோதிலும் தனது முயற்சியைக் கைவிடாமல், இறுதி மலை உச்சியை அடையும் வரை தொடர்ந்து போராடிய லோகசந்திரன், “12 Peaks • 7 Days • 7 States” என்ற தனது இலக்கை இறுதியில் நிறைவேற்றினார்.

இந்தப் பயணத்தில் லோகசந்திரனுக்குத் துணையாக Tharunn, Srikanth, Jeychandran, Hemaraj, Shantakumar, Shanaaran, Shallupriya, Vani, Jega, Mano உள்ளிட்டோர் பல்வேறு கட்டங்களில் அவருடன் இணைந்து மலையேறி, தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினர்.

லோகசந்திரனுக்கு இது முதலாவது சாதனை முயற்சியல்ல. கடந்தாண்டு 7 நாட்களில் 9 மலைகளை ஏறி Malaysia Book of Records-இல் இடம்பிடித்த அவர், இம்முறை தனது எல்லையை மேலும் விரிவுபடுத்தி 7 நாட்களில் 12 மலைகள் என்ற புதிய சவாலை முன்னெடுத்தார்.

இந்தப் பயணத்தில் அவர் Gunung Ledang, Gunung Datuk, Gunung Rembau, Gunung Berembun, Gunung Hitam, Gunung Brinchang Barat, Gunung Jasar, Gunung Sarut, Gunung Jerai, Gunung Kerunai, Gunung Ruil மற்றும் Gunung Siku ஆகிய 12 மலைகளின் உச்சியை அடைந்தார்.

குறிப்பாக, நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை எட்டிய லோகசந்திரன், இந்தச் சாதனையை மலேசியாவுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது பயணத்தில் ஆதரவளித்தவர்கள், வழிகாட்டியவர்கள், மருத்துவ உதவி வழங்கியவர்கள், ஊக்கமளித்தவர்கள் மற்றும் தமக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“வலி மறைந்துவிடும்; ஆனால் இந்தச் சாதனையும் நினைவுகளும் என்றும் நிலைத்திருக்கும்” என்ற உறுதியுடன், பல தடைகளையும் கடந்து விடாமுயற்சியால் தனது இலக்கை வெற்றிகரமாக எட்டிய லோகசந்திரனுக்கு வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!