கிள்ளான் பள்ளத்தாக்கில் நாய்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்; உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்

கோலாலம்பூர், அக்டோபர்-28,
கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நாய்களை கடத்தி, அவற்றைப் விடுவிக்க பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவி, நாய் உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிலர் தங்களை DBKL அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டைகள் அணிந்து, நாய்களைப் பிடித்து பின்னர் ‘பிணைப்பணம்’ கேட்கின்றனர்.
ஒரு நாய் உரிமையாளர் தனது நாயை விடுவிக்க அக்கும்பலிடம் 300 ரிங்கிட்டை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
கோம்பாக், கெப்போங் உள்ளிட்ட பகுதிகளிலும் இத்தகையச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாம்.
அதிகாரிகள் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
என்றாலும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை உடனடியாக போலீஸில் புகாரளிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாய்களை வீட்டுக்கு வெளியே கட்டி வைக்கும் போது கவனமாக இருப்பதோடு, அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி கும்பல்களிடமிருந்து உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.



