
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 17,896 கள்ளக்குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10% க்கும் அதிகமானோர் குழந்தைகள் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அனைத்து குழந்தைகளும் குறைந்தது ஒரு பெற்றோருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள், அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். குடிநுழைவுத் துறை 20 தடுப்பு மையங்களையும், 18 நிரந்தர மற்றும் 2 தற்காலிக தடுப்பு மையங்கள் நடத்தி வருகிறது.
அதோடு, பைத்துல் மஹாபா (Baitul Mahabbah) எனப்படும் சிறார்களுக்கான 6 மையங்களையும் அது இயக்குகிறது. இம்மையங்கள் மொத்தமாக 31,530 பேர் கொள்ளளவைக் கொண்டவை; கைது மற்றும் தடுத்து வைப்பு ஆகியவற்றைப் பொருத்து, ஒரு நேரத்தில் 16,000 முதல் 18,000 பேர் வரை அங்கு தடுத்து வைக்க முடியும்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்போரில் 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 90 விழுக்காட்டைப் பிரதிநிதிக்கின்றனர்.
மியன்மார் நாட்டவர்கள் 42 விழுக்காட்டினர், பிலிப்பின்ஸ் நாட்டினர் 22 விழுக்காட்டினர்,
இந்தோனேசியர்கள் 21 விழுக்காட்டினர் மற்றும் வங்காளதேசிகள் 6 விழுக்காட்டினர் என சைஃபுடின் கூறினார்.