
குவாலா பிலா, அக்டோபர்-6, நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் ஓய்வுப் பெற்ற ஆசிரியர் ஒருவர் சொந்த மகனாலேயே குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
கம்போங் செனாலிங் அருகே உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் மகன் தற்கொலைக்கு முயன்ற போது, 65 வயது தந்தை அவனை ஆசுவாசப்படுத்த முயன்றுள்ளார்.
அப்போது மேலும் ஆவேசமடைந்த 32 வயது மகன், தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றான்.
பின்னர் அங்கிருந்து காரில் சென்றவன், செனாலிங் சிற்றூரில் சாலையோரமாக வாயில் நுரைத் தள்ளி இறந்துகிடந்தான்.
குவாலா பிலா போலீஸ் அதனை உறுதிப்படுத்தியது.
தந்தை மற்றும் மகனின் சடலங்கள் சவப்பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.