கூலிம், ஜூன் 13 – கெடாவில், நாயை இறக்கமின்றி மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற, தோட்ட வேலை செய்யும் ஆடவன் ஒருவனுக்கு ஈராயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதித்து கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
66 வயது மாட் யூசோப் மாஜிட் (Md Yusof Majid) எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவன் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இம்மாதம் ஒன்பதாம் தேதி, காலை மணி 7.30 வாக்கில், ஜுச்சோங் (Junjung) இடைநிலைப்பள்ளிக்கு முன்புறம் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, அந்த நாயின் கால்களை கட்டி, அதனை மோட்டார் சைக்கிளில் அவன் இழுத்துச் சென்றுள்ளான்.
அதனால், குற்றவியல் சட்டத்தில் 428-வது பிரிவின் கீழ், அவனுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது வேளை ; தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இன்று அவ்வாடவன் செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ஆடவன் ஒருவன், மோட்டார் சைக்கிளில் நாயை கட்டி இழுத்துச் சென்றதால், அந்நாய் காயங்களுக்கு இலக்காகும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைராலானது குறிப்பிடத்தக்கது.