அலோர் ஸ்டார், ஜூலை 24 – இவ்வாரம் வெள்ளிக்கிழமை, சூதாட்டம் இல்லாத கெடா பேரணியில் சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது குழு, அது குறித்து போலீசாரிடம் முன்கூட்டியே அறிவிக்குமாறு நினைவூட்டப்படுகிறது.
2012-ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டப்படி, பேரணி ஏற்பாட்டாளர்கள் அது குறித்து போலீசாரிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம் என, கோத்தா ஸ்டார் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் சித்தி நோர் சலவத்தி சஹாட் (Siti Nor Salawati Saad) தெரிவித்தார்.
ஏற்பாட்டாளர்கள், பேரணி குறித்து, விண்ணப்பம் வாயிலாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
அதே சமயம், பேரணி நடைபெறவிருக்கும் இடத்தின் உரிமையாளரின் அனுமதியை பெற்றிருப்பதோடு, பேரணி தொடர்பான வழிகாட்டிகள், நிபந்தனைகள் ஆகியவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
வழிபாட்டு தளங்கள், பொது போக்குவரத்து நிலையங்கள், பள்ளி அல்லது மருத்துவமனை போன்ற பொது கட்டடங்களை அவர்கள் பயன்படுத்தக்கூடாது.
அதனால், பேரணி நடைபெறும் போது, நிலைமையை கண்காணிக்க போலீசாரிடம் முன்கூட்டியே அது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டுமென சலாவதி வலியுறுத்தினார்.
பேரணியின் போது, பொது அமைதிக்கோ, பாதுகாப்பிற்கோ ஊறு விளைவிக்கும் நடவடிகைகள் கண்டுபிடிக்கப்பட்டால், பேரணி பங்கேற்பாளர்கள் அல்லது அதன் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸ் ஒருபோதும் தயங்காது எனவும் சலவாத்தி எச்சரித்தார்.
சூதாட்ட கடைகளை மூடும் கெடா அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இவ்வாரம் வெள்ளிக்கிழமை, நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் இணைந்து, கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் “கெடா பெபாஸ் ஜூடி” பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.