சிக், மே 9 – “வேஸ்” (WAZE) வழிகாட்டியை பயன்படுத்தி, மோட்டார் சைக்கிளில், கெடா, சுங்கை பெட்டாணியிலுள்ள தனது சகோதரரரின் வீட்டிற்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர், வழி தவறி காட்டில் ஆறு மணி நேரத்திற்கும் கூடுதலாக தொலைந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 32 வயது இளைஞர் பினாங்கில் வேலை செய்கிறார். ஹரி ராயாவை கொண்டாடுவதற்காக, கெடா, சுங்கை லாலாங்கிலுள்ள, தனது நண்பரின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார்.
அங்கிருந்து மீண்டும் பினாங்கிற்கு திரும்பும் வழியில், வேஸ் உதவியோடு சுங்கை பெட்டாணியிலுள்ள, தனது மூத்த சகோதரரின் வீட்டிற்கு செல்ல முயன்ற அவர், குவாலா கெட்டிலிலுள்ள, பெல்டா தெலூய் கானான் காட்டில் வழி தவறி சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் பின்னிரவு மணி ஒன்று வாக்கில் நிகழ்ந்துள்ளது. அவர் வழி தவறி சிக்கிய காட்டுப் பகுதியில் தொலைத் தொடர்பு இணைப்பு இல்லை என்பதால், ஆறு மணி நேரத்திற்கும் கூடுதலாக அங்கிருந்து வெளியேற முடியாமல் அவர் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.
இறுதியில், காலை மணி ஏழு வாக்கில், அவ்வாடவர் தொடர்புக் கொண்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிக் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், அருகிலுள்ள கிராம மக்களின் உதவியோடு, காட்டிற்குள் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் சம்பந்தப்பட்ட ஆடவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
ஆறு மணி நேரத்திற்கும் கூடுதலாக, அடர்ந்த காட்டில் சுற்றுத் திரிந்ததால், களைப்பாகவும், அழுத நிலையிலும் அவ்வாடவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக பெல்டா தெலூய் திமோர் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவ்வாடவரின் நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது.