
கோலாலம்பூர், ஏப்-7- கெந்திங் மலை சாலையில் போக்குவரத்து விதிமுறைக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் எதிரே வந்த காரை உரசிச் செல்லும் ஒரு டேஷ் கேம் வீடியோ இணைய வாசிகளிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
X தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த 20 வினாடிக் காணொளியில், கீழ்நோக்கிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட ஒருவழிப் பாதையில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மேல்நோக்கிச் செல்வது பதிவாகியுள்ளது.
அந்தக் காணொளியில், சரியான திசையில் சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற செடான் காரை அந்த மோட்டார் சைக்கிள் உரசிச் செல்வது தெரிகிறது.
இதனால் அந்தக் கார் திடீரென பிரேக் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அந்த மோதலின் தாக்கத்தால் ஓட்டுநர் கடுமையாகத் தடுமாறுகிறார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ், போக்குவரத்திற்கு எதிராக வாகனம் ஓட்டுவது, பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான ஓட்டுதலுக்கான கடுமையான குற்றமாகும்.
பல உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்த அந்த ஓட்டுநரை அடையாளம் கண்டு அவர் மீது வழக்குத் தொடர, இந்தத் தெளிவான டேஷ்கேம் ஆதாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என சமூக ஊடகப் பயனர்கள் அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.



